சிருங்கேரி 36-வது பீடாதிபதி பாரதி தீர்த்த சுவாமிகள் நேற்று முன்தினம் திருச்செந்தூருக்கு வந்தார். அவர் தெற்கு ரதவீதியில் உள்ள கட்டியம் அய்யப்பர் அய்யர் மகாலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
நேற்று அதிகாலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு தங்க குடத்தில் கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கோவிலில் மூலவருக்கு சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் உதய மார்த்தாண்ட அபிஷேகம் செய்தார். பிறகு சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சிருங்கேரி மடம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் தங்க முலாம் பூசப்பட்ட கதவு வழங்கப்பட்டது.
இந்த தங்க கதவு மூலவர் சன்னதியில் பொருத்தப்பட்டு இருக்கிறது. கதவுக்கான தங்க சாவிகளை கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் அர.சுதர்சன் ஆகியோரிடம் சிருங்கேரி பாரதி தீர்த்த சுவாமிகள் வழங்கினார்.
பின்னர் அவர் தங்க கதவை திறந்து வைத்து, மூலவருக்கு உதய மார்த்தாண்ட தீபாராதனை செய்து, 108 தங்க மலர்களால் அர்ச்சனை செய்தார். கோவிலில் பொருத்தப்பட்டு உள்ள தங்க கதவில் அறுபடை வீடுகளில் உள்ள முருகப் பெருமானின் உருவங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
-நன்றி மாலை மலர்