காணவேண்டிய நவத்திருப்பதிகள்
நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்கள் சைவ-வைணவ கோவில்கள் நிறைந்த ஆன்மிக பூமியாகும். வைணவர்கள் புண்ணிய தலங்களாக கருதும் 108 திவ்விய தேசங்களில் தலைசிறந்து விளங்கும் நவ திருப்பதிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ளது அவற்றை பற்றிக் காண்போம்.
ஸ்ரீவைகுண்டம் -சூரியன்
நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாக விளங்குவது ஸ்ரீவைகுண்டம். இங்குள்ள மூலவர் பெருமாள் நின்ற கோலத்தில் வைகுண்ட நாதராக அருள்பாலிக்கிறார். உற்சவர்கள்ளபிரான். இந்த கோவில் நெல்லையில் இருந்து 28 கி.மீ தூரத்திலும் தூத்துக்குடியில் இருந்து 36 கி.மீ தூரத்திலும் உள்ளது.
திருவரகுணமங்கை(நத்தம்) - சந்திரன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது திருவரகுணமங்கை என்னும் நத்தம் திருத்தலம். இங்குள்ள பெருமாள் விஜயாநன பெருமாள்.
திருப்புளியங்குடி - புதன்
நத்தத்தில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புளியங்குடி. இங்குள்ள பெருமாள் காய்சினவேந்தன் என்று அழைக்கப்படுகிறார்.
பெருங்குளம் - சனி
திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பெருங்குளம். இங்குள்ள மூலவர் வேங்கடவாணன் உற்சவர் மாயக்கூத்தர்.
தொலைவில்லிமங்கலம் (இரட்டைதிருப்பதிதெற்குகோவில்) - ராகு
பெருங்குளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கி.மீ மேற்கு நோக்கி வந்தால் இரட்டை திருப்பதி தலங்களை அடையலாம். இரட்டை திருப்பதியில் தெற்கு கோவிலில் மூலவர் தேவர்பிரான் உற்சவர் ஸ்ரீனிவாசன்.
வடக்குகோவில் (இரட்டைதிருப்பதி) - கேது
தெற்கு கோவிலில் இருந்து கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. வடக்கு கோவில் இங்குள்ள மூலவர் அரவிந்த லோசனர். உற்சவர் செந்தாமரைக் கண்ணன்.
தென்திருப்பேரை - சுக்கிரன்
நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் நெல்லை - திருச்செந்தூர் ரோட்டில் உள்ளது. இங்குள்ள மூலவர் மகரநெடுங்குழைக்காதன் உற்சவர் நிகரில் முகில்வண்ணன்.
திருக்கோளுர் - செவ்வாய்
தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகாி செல்லும் வழியில் 3 கி.மீ. மேற்காக வந்து இடதுபுறம் செல்லும் ரோட்டில் 2 கி.மீ சென்றால் திருக்கோளுர் திருத்தலம் வரும். இங்குள்ள மூலவர் வைத்தமாநிதி பெருமாள். உற்சவர் நிச்சோபவிந்தன். இந்த தலம் மதுரகவி ஆழ்வார் அவதார தலமாகும்.
ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) - குருவியாழன்
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்து உள்ளது. இங்குள்ள பெருமாள் ஆதிநாதன் என்று அழைக்கப்படுகிறார்.
நவகைலாயக்கோவில்கள்
நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவத்தலங்களும் நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில்தான் உள்ளது. அவை வருமாறு :-
பாபநாசம் - சூரியன்
நவகைலாயங்களில் முதல் கைலாயமாக திகழ்வது பாபநாசம் பாவநாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள மூலவர் ருத்திராட்சத்தினால் ஆனவர். அம்பாள் உலகாம்பிகை.
சேரன்மாதேவி - சந்திரன்
2வது கைலாயமாக திகழ்வது சேரன்மாதேவி அம்மநாத சுவாமி கோவில். இந்த கோவில் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாள் ஆவுடைநாயகி.
கோடகநல்லூர் - செவ்வாய்
இந்த தலம் 3-வது கைலாயமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் பெயர் கைலாச நாதர். இறைவி பெயர் சிவகாமி அம்பாள். இந்த கோவில் நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. சேரன்மாதேவி ரோட்டில் நடுக்கல்லூர் என்ற ஊரில் இருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது.
குன்னத்தூர் - ராகு
நவகைலாயங்களில் 4-வது தலமாக திகழ்வது குன்னத்தூர் கோதபரமேசுவரர் கோவில் இந்த கோவில் நெல்லை பேட்டையில் இருந்து மேல திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள அன்னை சிவகாமி அம்பாள் என்றழைக்கப்படுகிறாள். (இந்த 4 தலங்களும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது)
முறப்பநாடு - குரு (வியாழன்)
5-வது தலம் முறப்பநாடு கைலாசநாதர் கோவில். நெல்லையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது. நெல்லையில் இருந்து வல்லநாடு கொங்கராயகுறிச்சி கலியாவூர் உழக்குடி பூவாணி ஆழ்வார் கற்குளம் செல்லும் டவுன் பஸ்கள் இங்கு செல்லும். இது தவிர பாளை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் பஸ்கள் முறப்பநாட்டில் நின்று செல்லும்.
ஸ்ரீவைகுண்டம் - சனி
நவகைலாயங்களில் 6-வது தலம் ஸ்ரீவைகுண்டம் கைலாயநாதர் கோவில். இது பூலோக கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இது குமர குருபர சுவாமிகள் அவதரித்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்திருப்பேரை - புதன்
இந்த தலங்களில் 7-வதாக இடம் பெறுவது தென்திருப்பேரை கைலாயநாதர் கோவில். இங்கு சுவாமி சிவகாமி அம்பாளுடன் அருள்பாலிக்கிறார். அம்பாளுக்கு அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு. இக்கோவில் நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.
ராஜபதி - கேது
நவகைலாயங்களில் 8-வது கைலாயமாக திகழ்வது ராஜபதி தலம் ஆகும். இக்கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டது. முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது. அதையே தற்போது பக்தர்கள் வணங்குகிறார்கள் தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையை அடுத்த மணத்தி கிராமத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் வடக்கே அமைந்து உள்ளது. இக்கோவிலில் இருந்ததாக கூறப்படும் நந்தி தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.
சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
இந்த திருத்தலங்களில் 9-வது கைலாயமாக திகழ்வது சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர் கோவில். இங்குள்ள அம்பாள் சிவகாமி அம்மை. இந்த தலத்தின்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமிக்கிறது. நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது. இந்த நவ தலங்களில் வழிபட்டால் நவக்கிரக தோஷம் நீங்கி அவைகளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கோவில்
திறப்பு நேரம் காலை மாலை
பாபநாசம்
6.30 மணி முதல் 12 மணி வரை
5 மணி முதல் இரவு 7 மணி வரை
சேரன்மாதேவி
9 மணி முதல் 10 மணி வரை
4 மணி முதல் மாலை 5 மணி வரை
கோடகநல்லூர்
9 மணி முதல் 10 மணி வரை
5 மணி முதல் இரவு 7 மணி வரை
குன்னத்தூர்
7 மணி முதல் 8 மணி வரை
5 மணி முதல் மாலை 6 மணி வரை
முறப்பநாடு
7 மணி முதல் 9 மணி வரை
5 மணி முதல் இரவு 7 மணி வரை
ஸ்ரீவைகுண்டம்
6 மணி முதல் 10 மணி வரை
4 மணி முதல் இரவு 8 மணி வரை
தென்திருப்பேரை
7 மணி முதல் 9 மணி வரை
5 மணி முதல் மாலை 6 மணி வரை
சேர்ந்தபூமங்கலம்
7மணிமுதல்9 மணி வரை
5 மணி முதல் மாலை 6.30 மணி வரை
உவரிசுயம்புலிங்க சுவாமி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே வங்கக்கடல் ஓரம் இயற்கை எழில் சூழ அமைந்ததுதான் உரி கிராமம். இங்குள்ள கடற்கரையில் கடம்ப கொடிகளுக்கு இடையே சுயம்புவாய் தோன்றி இப்பூவுலக மக்களின் பிணி போக்கி அருள் செய்து கொண்டு இருக்கிறார் சுயம்புலிங்க சுவாமி.
இயற்கையில் எழில் வாய்ந்த உவரி கிராமம் முன்பு கீழுர் மேலூர் என்று இரு பகுதிகளாக இருந்தது. இவ்விரு பகுதிகளையும் ஒற்றையடி பாதையே இருந்தது. இதன் வழியாகதான் யாதவர் குல பெண்கள் பால் தயிர் கொண்டு செல்வார்கள். அவ்வாறு அவர்கள் செல்லும்போது அவ்வழியில் கிடந்த கடம்பக்கொடிகளில் ஒருவரது கால் தினமும் இடறி பால் தயிர் ஆகியவை பானையோடு தரையில் விழுந்து கொட்டிக் கொண்டே இருந்தது. தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திலேயே பானைகள் விழுந்து பால் கொட்டும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வந்தது. தினமும் இவ்வாறு நடந்ததால் வருமன அந்த பெண்ணுக்கு வருமானம் குறைந்தது. இதனால் அவளது கணவன் ஆத்திரமடைந்து நடந்ததை கேட்டான். அந்த பெண்ணும் உள்ளதை உள்ளபடியே கணவனிடம் கூறினாள். இதைக்கேட்ட இவளது கணவன் குறிப்பிட்ட அந்த இடத்துக்கு சென்று அங்கிருந்த கடம்பப்கொடியை கோடாரியால் வேரோடு வெட்டினான். அப்போது அந்த கடம்பக்கொடியின் அடிப்பகுதியில் அடிப்பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் செய்வதறியாது திகைத்து நின்றான். இதற்கிடையே இந்த சம்பவம் காட்டு தீ போல் ஊருக்குள் பரவியதால் ஊர் பெரியவர்களும் அங்கு வந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு பெரியவருக்கு சுவாமியின் இருள் கிடைத்து அவர் மூலமாக இங்கு சிவபெருமாள் சுயம்புவாக தோன்றி இருப்பதும் ரத்தம் வடியும் இடத்தில் சந்தனத்தை பூசினால் ரத்தம் வழிவது நின்றுவிடும் என்ற அருள்வாக்கு கிடைத்தது.
அடி முடி அறியா ஓங்கி உயர்ந்த சிவபெருமான் நம் ஊரில் தாமாகவே தோன்றியுள்ளான் என்ற விபரம் அறிந்த ஊர் மக்கள் ஆனந்த வெள்ளத்தில் பக்தி பரவசமடைந்தனர். இதையடுத்து வெட்டுண்ட இடதத்தில் சந்தனத்தை தடவ என்ன ஆச்சரியம் ரத்தம் வழிவது உடனடியாக நின்று விட்டது. அன்று முதல் இன்றுவரை சுவாமிக்கு தினமும் சந்தன காப்பு இடப்படுபிறது. மறுநாள் அபிஷேகத்துக்கு முன்பு அந்த சந்தன காப்பு பிரிக்கப்பட்டும் அந்த சந்தணமே அருமருந்தாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பல்வேறு மருத்தவ குணங்கள் நிறைந்தது என்று கூறப்படுகிறது.இங்குள்ள சுவாமியை இதய சுத்தியுடன் நம்பிக்கையுடன் வழிபட்டால் கேட்வருக்கு கேட்ட வரமும் தீரா பிணி கொண்டவருக்கு பிணி தீர்த்தும் அருள் பாலித்து வருகிறார் சுயம்பு லிங்கசாமி. இந்த கலியுகத்தில் இப்படியும் நடக்குமா? என்று எண்ணத் தோன்றுகிறதா? ஆம் இன்றும் உவரி கோவிலில் நோய் முற்றியவர்கள் 41 நாட்கள் தங்கியிருந்து நலம்பெற்று திரும்புவதை காணலாம். இக்கோவிலின் சிறப்புகளை அறிந்து நெல்லை தூத்துக்குடி குமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தினந்தோறும் வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இங்கு வரும் பக்தர்கள் கடல் மண்ணை கடல் நீர் சொட்ட சொட்ட சுமந்து வந்து கடற்கரையில் குவித்து வைக்கும் நேர்ச்சைகளைச் செய்வது வேறு எங்கும் காண முடியாது. மார்கழி மாதம் 30 நாட்களும் சூரிய ஒளி சுவாமி மீது தினமும் படும் சிறப்பும் இக்கோவிலுக்கு உண்டு.இந்த கோவிலில் உயர்ந்த வாயிலைக் கொண்ட கல் மண்டப சுற்றுபிரகாரத்துடன் கூடியது. கோவிலின் உள்ளே சென்றதும் ஓங்கி உயர்ந்து இருக்கும் கொடிமரத்தை தரிசிக்கலாம். அதையடுத்து பலி பீடம் தொடர்ந்து மூலவர்க்கு முன் நந்தியும் உள்ளது.
உள்ளே சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ள சுவாமி ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க அதன் கீழ் சிறிய லிங்கமாக இருக்கிறார். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்பதை உணர்த்தும் விதமாக இறைவன் இங்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மசக்திஅம்மன்
தந்தையுடன் தாயும் இருப்பதுதான் சிறந்தது. அதுபோல் இங்கு தாயாக இருந்து பக்தர்களை காப்பவள் பிரம்மசக்தி அம்மன். இந்த அம்மனுக்கு தனி கோவில் உள்ளது. மேலும் சுயம்புலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் வினாயகர் மற்றும் பிற பரிவார தேவதைகளும் உள்ளனர். கோவிலின் உற்சவ மூர்த்தி சுப்பிமணியர் இக்கோவிலின் தல விருட்சம் கடம்பக்கொடி.