திருச்செந்தூரில் பெளர்ணமி கிரிவலம்
கிரி என்றால் மலை.வலம் என்பது வலதுபுறமாக [பிரதட்சணம்]சுற்றுவது. கிரிவலம் என்றால் மலையைச் சுற்றுவது என்று பொருள்படும்.கிரிவலம் என்றவுடன் நமக்கு திருவண்ணாமலை நினைவுக்கு வரும்.அங்கு மலையாகவே சிவபெருமான் உள்ளார்.
‘கண்டம் தான் கறுத்தான் காலன் ஆருயிர்
பண்டுகால் கொடு பாய்ந்த பரமனார்
அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ
விண்டுபோகும் நம் மேலை வினைகளே’
என்று அண்ணாமலையாரை திருநாவுக்கரசர் பாடிப் பரவசமெய்தினார்.
அண்ணாமலையாரின் சுடரில் உதித்த,செந்தீயான செந்தில் கந்தமாதன பர்வதம் [செந்தின்மாமலை]குடைவரையில் கோடிச் சூரியனாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார்.முருகப்பெருமானின் அவதாரம் சூரபத்மனை வதம் செய்வதற்காகஆகும்.இவ்வவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய இடம் திருச்செந்தூராகும்.குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்ட சுப்பனும் [சுப்பிரமணியனும்],அப்பனும் [சிவனும்]ஓன்று என்பதாக தற்போது திருச்செந்தூரில் கிரிவலம் வரும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செய்து வருகின்றனர்.
பெளர்ணமி நாளில் திருச்செந்தூர் தூண்டிகை விநாயகர் கோயிலை மூன்று தரம் சுற்றி வந்து பின்பு வெளிப்பிரகாரத்தை மூன்று முறைச் சுற்றி வழிபடுகின்றனர்.எவ்வித இடர்பாடுமின்றி இரவுபகல் எந்நேரமும் சுற்றி
வருவதற்கு வசதியாக உள்ளது.இரத்த அழுத்தம்,இதயநோய்,சர்க்கரை வியாதி குணமாகும் அனைத்திற்கும் மேலாக முருகனருள் கிட்டும். திருவண்ணாமலைக்கும் திருச்செந்தூர் சந்தனாமலைக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன.திருவண்ணாமலையில் அஷ்டலிங்கங்கள் உள்ளன. அதுபோல் திருச்செந்தூரிலும் அஷ்டலிங்கங்கள் உள்ளன.மூலவரான பாலசுப்பிரமணியர் வழிபடும் 1.பிருத்வி லிங்கம் 2.அப்புலிங்கம் 3.தேயுலிங்கம் 4.வாயுலிங்கம் 5.ஆகாயலிங்கம் மற்றும் மூலவருக்குப் பின்னால், 6.சூரியலிங்கம் மூலவருக்கு வலப்புறம் 7.சந்திரலிங்கம் உற்சவமூர்த்தியான ஆறுமுகப்பெருமானுக்கு வலப்புறம் 8.ஆன்மலிங்கம் ஆகியன உள்ளன. தீர்தங்களைப் பொறுத்த அளவில் திருவண்ணாமலையில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன.திருச்செந்தூரில் 24 காயத்திரி மந்திரங்களும் 24 தீர்த்தங்களாக உள்ளன.முற்காலத்தில் தீர்த்தங்கள் தனித்தனியே இருந்தன. தற்போது 23 தீர்த்தங்கள் கடலினுள்ளே உள்ளன.உற்சவ மூர்த்திக்கு நேராக கடற்கரையில் கந்தபுஷ்கரணி எனப்பெறும் நாழிக்கிணறு 24 வது தீர்த்தமாக உள்ளது.கடலில் ஒருமுறை நீராடினால் 23 தீர்த்தங்களில் நீராடிய பயன் கிடைக்கும்.ஆதிசங்கரர்,வஷிஷ்டர்,வாம தேவர்,சாபாலி,காவிபர், மார்க்கண்டேயர், கொளதமமுனிவர்,முற்கலமுனிவர்,தேசிகர், அகத்தியர், அருணகிரியார்,குமரகுருபரர்,போகர் உள்ளிட்ட ஏராளமான சித்தர்கள் முருகனைப் போற்றி அருள்பெற்றத் தலமாகும்.அகிலபாரத முருகபக்தப் பேரவையினர் ஒவ்வொருமாதமும் கிரிவலம் செய்து வருகின்றனர்.கிரிவலம் முடிந்ததும் பிரசாதம் வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஆதித்தன் செய்து வருகிறார்.
0 comments:
Post a Comment